07 November 2011

துளி 10

                                                                  அழகின் ஈசன்!




அலைபாயும் கண்கள்! அதுபோல் மனமும் 
நிலைகொளாதான்! கேளான்! நிர்பந்தன்! நேசன்! 
விலைகேட்டும் வாங்கான்! பாங்கன்! சொற்பதன்!
கலைகுணத்தான்! கடுஞ்சினன்! வாகன்! வித்தகன்!

எதற்கும் அஞ்சான்! எதினும் விஞ்சுவான்!
பதர்கும் வார்ப்பான்! பகுப்பன்! பரிவுளன்!
குதர்கன்! பக்தன்! குன்றேறி நிற்பான்!
வதனம் குதூகலன்! வார்த்தை விசாலன்!

மண்வாசனை பேச்சில் மயக்கும் தெற்கன்! 
தன்போக்கில் போகும் தனியன்! தனையன்!
தன்நிகரான்! வீரன்! தனியினன்! தலைவன்!
தன்மூக்கில் பீறிய தங்கம் கொண்டவன்!

படைக்கு முந்துவான்! சடுதியில் பிந்துவான்!
உடையலங்கார அக்கறையுள்ளவன்! எல்லோருக்கும் உதவுபவன்!
எப்போதும் "நீங்கள் எல்லாம் வாலிப பிள்ளைக!" வசனம் கொண்டவன்!
தப்பேதும் அறியாதவன்! நட்புகுளத்தின் நற்துளியிவன்!

நட்பு வட்டத்தை நாள்தோறும் பெருக்குவான்! 
நண்பர்கள் வாட்டத்தை எப்படியேனும் சுருக்குவான்! 
உட்புகுந்த ஆண்டின் உயர் "TASA "தலைவன்!
(  " Tamilnadu Agricultural Students' Association " )
ஊற்றெடுக்கும் உரிமை போராட்ட இளைஞன்!

ஈரவிழி காவியத்தை இமையிடுக்கில் வடிப்பான்!
இதற்காக நண்பர்கள் யாவரையும் இழுப்பான்!
சாரதியாய் தமிழ்சுடர் தாங்கியேந்தி நடப்பான்!
சந்தர்ப்பம் வாய்த்தால் சந்திரனுக்கே நடப்பான்!

சந்திக்க வாய்ப்பில்லை, இனி  என்றுமே இல்லை!
சிந்தனை  ஏய்ப்பில்லை, நீ இல்லவே இல்லை!
( துளி கண்களில் ஊற்றெடுத்து வடிகிறது )

                                                                 
                                                                                       துளி தொடரும் ..........

14 March 2011

துளி 9


அழுதுண்டு வாழ்வோம் !

                           காப்பு !

       உயிரெலாம் உலகில் வாழ 
             உதவிடும் மங்கை நல்லாள் !
       பயிரெலாம் வளர்த்து நன்றாய் 
             பாரினில் பசுமை ஊட்டி 
       வயிரெலாம் நிறைத்து நாட்டில் 
             வருகிற வறுமை ஓட்டி 
       உயிரெலாம் காக்கும் தாயே !
             உதவிடென் கவிதை காக்க !


௧.   விதையினை கையில் ஏந்தி 
               விதைத்திடும் உழவன் நானென்
       கதையினை கேட்பாய் பாரே !
                கனவிலும் நினையார் யாரும் 
       சிதையினை வதைக்கும் தீயில் 
                குளிரினில்,காற்றில் , நோயில் 
       பதைத்தினும் உழைக்கும் வாழ்க்கை 
                பண்புளோர் இதனை கேட்க !


௨.  மடியிலே வாங்கி நித்தம் 
               மனையிலே உலையில் போடும் 
      நொடியிலே தீர்ந்து போகும் 
               நிலையிலா எந்தன் வாழ்வு 
      விடியுமா எமக்கு காலம் ?
               விடியுதே உலகில் நாளும் 
      வடித்திடும்  கண்ணீர் கண்டு 
                கடலதும் கடன்கள் கேட்கும் !


௩.  உழுதிடும் எங்கள் பின்னே 
               உலவிட வேண்டும் என்றும்
      தொழுதுநல் உலக மக்கள் 
               போற்றிட சொன்னார் யாரோ ?
      அழுதிடும் வாழ்க்கை வாழ்ந்து 
                அனைவரின் பின்னே சென்று 
      தொழுதிடும் வாழ்க்கை வாழ்ந்து 
                 சாகிறோம் துயரில் ஆழ்ந்து !


௪.  சந்தை கொணர்ந்த பொருளனைத்தும் 
                 குறைந்த விலைக்கு போவதைநாம் 
       விந்தை யோடு பார்த்திருப்போம்
                  விளைய வைக்க பட்ட இன்னல் 
       சந்தை மக்கள் ஏதறிவார் ?
                  சரிதம் முதலாய் நாங்கள்தாம் 
       கந்தல் ஆடை சொந்தமென்று 
                  கண்டு கொள்வோம் அந்தமட்டே !


௫.  கையில் வாங்கும் பணமெல்லாம் 
                   கணநே ரத்தில் பறந்திடுமே !
       பையில் போட இருக்காது 
                   பட்ட கடனை அடைத்திடவே !
       வெய்யில் முன்னே பனிபோலே 
                   வந்த பணமும் கரைந்திடுமே !
       மெய்யில் பட்ட வேதனைகள் 
                    வருடம் முழுதும் நிலைத்திடுமே !

௬.  மீண்டும் விதைக்க பணமில்லை !
                    மீண்டும் கடனே வேறில்லை!        
         யாண்டும் உலக உயிர்காக்க
                    எங்கள் குலமே பயிர் காத்து 
         வேண்டும் மட்டும் உணவிட்டு 
                    வாழும் வாழ்க்கை கண்டுஎங்கள்  
         தோண்டும் கிணறும் ஊறிவிடும் ! 
                    பட்ட துன்பம் ஆறிவிடும் !


[ கல்லூரியின் ஆண்டு புத்தகம் வென்றியத்தில் (TRIUMPH  1986 - 87)  என்  முதலாம் ஆண்டு தொடக்கத்தில் நான் எழுதி இடம் பெற்ற கவிதை ]