27 August 2010

துளி 2

முதல் நாள்.
அங்கே.........

காலம் உன்னை கடந்தாலும் காற்று பையை பிரிந்தாலும் 
காலனிடமிருந்து மட்டும் கடன் கிடைக்காது என்பதுணர்க!  

செயற்கை தடாகம் தாண்டியவுடன் இங்குதான் செயல்வீரர்கள்
செயற்கரிய வரவேற்றனர்! பச்சை ஆடைஉடுத்தி பாங்காய்!
கல்லூரியின் படியேறி மகிழ்வும் கவலையும் மிரட்சியுடனும்
வில்லோடிவிட்ட வேலாய் விரைந்தோம் எழுச்சியுடன் !

செயற்கை நீரூற்று கீழிருந்து துளிகள் வீச இயற்கை நீரூற்று கண்களில்..
இந்த கல்லூரியில் மட்டும் எப்படி இத்தனை வண்ணங்களாய்  பசுமை!
இந்தப் பசுமை நினைவுகளல்ல! நினைவுகளாகப் போகும்  நிஜங்கள்!  
பெற்றோரை கிடைக்கப் பெற்றோர் பெருவாரியாய் கண்களில் துளிகளுடன்.

கண்ணின் மசி கரைந்து கன்னம் நனைத்த தோழியர் கூட்டம்.
எண்ணம் முழுதும் பெற்றோரை பிரிய போகும் துயர்.
நண்பர்களே! நீங்கள் யாரெல்லாம் அங்கே நின்றீர்கள் தெரியவில்லை!
கண்கள் எனக்கும்  திரையிட்டிருந்தது துளிகளால் புரியவில்லை!

ஆடி இட்ட ஓரிடம்! அது  கூடக் கூடும்  பேரிடம்!
நாடி வந்த சீரிடம்! நன்றிது போல்  உண்டோ பாரிடம்!
தேடி  வந்து கூடிடும்! தேன்பாகில் ஊறிடும்!
சூடி வந்த பூவிடம் சுந்தர தமிழ் பாடிடும்!

பாடல் அரங்கேறும் இடம்!
ஆடல்  அரங்கேறும் திடல்! 
திறமை மெருகேறும் இடம்!
சிறுமை வெளியேறும் திடல்!
திரைப்படம் இங்கு தூது போகும்!
நிறைகுடம் நித்தம்  ததும்பி ஓடும்!

ஆனந்தமா ! துக்கமா ! உணர்ச்சிப் பெருவாகத்தில் உள்ளம்!
ஏனிந்தத் துளிகள்! இமையணை தாண்டியும் வெள்ளம்!
நானிந்த உலகிற்குள் நுழைவேனென்று நினைக்கவில்லை!
வானிந்த பறவைகளின் சிறகுகளை நனைக்கவில்லை!

மண்வெட்டி பிடிக்க மலர்க்கைகள் அதிகமாய் வந்திருந்தன !
இந்த கல்லூரியில் தான் வண்டுகளை விடவும் மலர்கள் அதிகம் !
காகங்களை விடவும் கிளிகள் அதிகம்! நீரை விடவும் வயல்கள் அதிகம்!
மீசை முளைத்தவர்களை விடவும் ஆசைபட வைப்பவர்கள் அதிகம்

குயில்களை விடவும் இனிமை அதிகம்! அழுகை விடவும் ஆறுதல் அதிகம்!
மந்திகள் அதிகம்! மானினம் அதிகம்! மயங்கச் செய்யும் மதுவினம் அதிகம்!
சிந்தும் துளியை முந்தியால் துடைத்து அம்மா சொன்னார்கள் "அழாதே!"
கன்னம் நனைத்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை! 

                                                                                      துளிகள் வடியும்.......... 





24 August 2010

துளி !





துளி ! 
நிகழ்காலத்தின் கடைசி துளி அமுதம் வரை வழிந்தோடும் வாழ்க்கையை அருந்திவிடுங்கள் ! என் நண்பர்களே !

அது ஒரு மழைக்காலம் ! அந்தி மயங்கிய காலம் ! கதிர் முயங்கிய நேரம்
நாற்றங்கால் விட்டு  நடுவயல் தேடும் நாற்றின் பருவம்......

தோரண வாயில்கள் தொடர்ந்து அணி வகுத்தது போல் ஆங்காங்கே 
ஆல மரங்களும் அரச மரங்களும் நாவல் மரங்களும் நன்னீர் தெளித்தன.
நீர்த்துளிகள் இலைகளின் இடுக்குகளிடையே வழிந்தோடி உடல் நனைத்தன.

தலையின் மீது விழும் துளி உடலையும் மனதையும் குளிரூட்டியது.
 மலையின் முகடு வழியே வரும் காற்று மனதுக்குள் சிலிர்ப்பேற்றியது.

புதிதாய் பூத்த பூவை போல் அழகனைத்தையும் அடக்கி வைத்து 
நாணப்பட்டன! நர்த்தனமிட்டன! அத்தனை இலைகளும் ஆர்ப்பரித்தன.

பறவைகள் பாடி அழைத்தன.குயில்கள் கூவி அழைத்தன.
எங்கு நோக்கினும் மயில்கள் வயல்வெளிகளில் தங்கு தடையின்றி ஆடின.
தேனீக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் தேனுறிஞ்சிய வேகத்தில் 
மலர்கள் வழிநெடுகிலும் மயங்கிக்கிடந்தன !

வானம் துளி தூவி, துயிலுணர்ந்த முகிலை துகிலுரித்தது !
தூறல் நின்றாலும் துளிகள் நிற்கவில்லை 

சொட்டுச்சொட்டாய் ....... சொட்டுச்சொட்டாய்......  

நவம்பர் 5 , 1986 

நீயும் நானும் நம் கல்லூரி வாசலில் அடியெடுத்து வைக்கும்போது 
யாயும் ஞாயும் யார் யார் போலோ தானே  வந்தோம்!

கல்லூர் தெரியாது கல்லூரி தெரியாது 
செல்லூர் தெரியாது செல்லாத ஊரும் தெரியாது 
நல்லது தெரியாது அல்லதும் தெரியாது 
எவ்வூரும் தெரியாது எவரும் தெரியாது 
ஒவ்வொருவரும் நடந்து வந்தோம் !

" நீங்க எந்த வூரு ? "    
" தூத்துக்குடி..... நீங்க ? "
" திருவண்ணாமலை .... தம்பி ! பெயர்  என்னப்பா  ? "
" முத்து.... " 
" உங்க பையன் பெயரென்ன ? "
" அரசு... "

நீயும் நானும் பேசிக்கொள்ளவில்லை ! பெயர் மட்டும் தான் சொன்னோம் !
நம் தந்தையர் பேசிகொண்டதை நான் கவனிக்கவில்லை 
நீ கவனித்தாயா தெரியவில்லை .

கூப்பிடும் தூரத்திலிருந்து மீண்டும் கூப்பிடு  தூர தூரத்தில் கை 
கூப்பி நின்றனர் நம் மூத்த சகோதர மாணவர்கள் 

ஒரு செயற்கை நீர்த்தடாகம். 
தடாக நடுவில் மூன்று கொக்குகள் 
நான்காவது பறக்க எத்தனிக்கும் கொக்கு. 
கொக்குகளின் பின்னே செயற்கை நீரூற்று  அங்கே.........
                                                                                            
                                                                                    - துளிகள் வழியும்..........








23 August 2010

உருவானேன் ! உயர்வானேன்!

நண்பா !

உருவானேன் !  உயர்வானேன்!
உருவாவேன் ! உயர்வாவேன் !
கருவாவேன் !  உலகிற்கு
எருவாவேன் ! வெற்றித் 
திருவாவேன் ! இனி
வருவாய் ! திருமொழி தருவாய் !
உன்னாலே எந்நாளும் என்னேற்றம்
எல்லோரும் காண்போமே முன்னேற்றம்
( நன்றி ! என் இனிய நண்பர்களே ! ) 


* தூத்துக்குடி முத்து *