18 September 2010

துளி 5

வகுப்பறை !
வாழ்க்கை நெறியை 
வரி கேளாமல் 
வாரி வாரி 
இயற்கை வழங்கும் !
இனியாவது இரசிப்போம்!

விடியாத காலையை 
விடியச் சொல்லி 
வேகமாக வந்தேன் 
வகுப்பறை தேடி!

இந்நேரம்  துளி
என் முகத்தில்!

வகுப்பு!
அறையில் இல்லை  
இயற்கை 
முறையில் இருந்தது!

வயல் வெளியில், 
வரப்போரம், 
வளர்ந்த மர நிழலில் 
பயிர்களின் உளவியல்
பற்றிய வகுப்பு!
உழவியல் வகுப்பு!
(ஆக்ரோநோமி கிளாஸ் )

வயல் வெளியில் 
வகுப்பறையா ?

வாய்க்கால் நீரின் 
சலசலப்பில் 
வாழ்க்கை பாடமா?

கிளிகளின் 
இனிய ஒலியில் 
இயற்கை கீதமா?

இவையெல்லாம் 
புதிதாகத்தான் இருந்தது! 
புதிராகத்தான் இருந்தது ! 
"மாட்டிகொண்டோமோ" 
மனது சலனப்பட்டது! 
சஞ்சலப்பட்டது!

புதியதோர் உலகம்
செய்வதற்காக
புழுதியில் புதையல்
தேடினோம்!

வரப்புகளில் வந்து
நடக்காத கமலங்கள்
வயலுக்குள் வழுக்கின!

ஓடி வந்து
உலகம் கலந்தேன்!

ஒரு விழி அசைத்து
ஓரவிழி பார்க்கும்
உழவியல் ஆசிரியர்
( யாரென்று நண்பர்கள்
அறிவார்கள் )
மிரட்ட
நினைத்து
விழி உருட்டும்
விகல்பர்!

மிரட்டிய தொனியில்
" ஒய்  லேட்?"
மிரளாது நின்றேன்!

பின்னால் சப்தம்
தன்னால் விழுந்தான்
நண்பன் செல்வன்!
பயமறியா கன்று
சுயமிழந்தது!

வகுப்பு முடிந்ததை
வணக்கத்தில்
முடித்தார்!
பிணக்கமின்றி
சுயமிழந்தவனை 
சுனை நீரில் துடைத்தோம் !

துளி வரும்........

07 September 2010

துளி 4

ஆனந்தத் திருமுகன்!

துயர் கண்டு அயராதிரு! உயர்வாய்! உண்மை !

பகையிலான்! பைந்தமிழ் பாட்டுடையான்! சொந்தம்
வகையிலான்! வானுயர் சோகத்தினும் உள்ளம்
நகையுடையான்! நாவின் சுவையுடையான்! நண்பர்
தொகையுடையான்! வான்மனம் குணம் கொண்டான்!

அன்பன்! அன்பிலார்க்கும் நண்பன்! நல்லவன்!
நண்பகல் வரைநன்றாய் துயில்வதில் வல்லவன்!
அன்பில் அகன்றவன்! ஆனந்தத் திருமுகன்!
செண்பகச் சுகந்தன்! சுடரறிவின் செல்வன்!

இந்த சுந்தரன் பேகனின் மயிலாய் சுருண்டு கிடந்தான்.
யாரென்று  தெரியாதவாறு முகம் மூடிக் கிடந்தான்.
நாடி வந்தோரை ஓடச் செய்யும் சூட்டில் காய்ந்தான்.
மூலைஒன்றில் முக்காடிட்டு மதிலில் சாய்ந்தான். 

 "சாப்பிட்டீங்களா "
 "ஹ்ம்"
"உடம்பு சரியில்லையா "
"ஹ்ஹ்ம்"

நண்பர்கள் தன்னைச் சுற்ற வைக்கும் இந்த பத்தாவது கோள்
இண்டம் தன்னை சுருக்குவதாய்  போர்வைக்குள் சுருங்கியது.
நண்டதன் வளைக்குள் நுழைந்தாலும் இவனொரு எட்டாவது
கண்டம்! கணுவில்லா கன்னல்! நட்புக் காண்டம்! நளினன்!

பொதிந்து வைத்த பொட்டலமாய் கிடந்தவனை
அதிர்ந்தேதும் கூறாமல் அரைநிலவாய் முகம்பார்த்தோம்!
முதிர்ந்தவன் போல் முனங்கித் தீர்த்தான் முகத்தினின்றும்
உதிர்ந்த துளிதுடைக்க உளைச்சல் ஓடிவிட்டது !

அரசாள்பவன்! 

உதட்டோரச் சிரிப்பிருக்கும்! உள்ளார்ந்த நட்பிலாளும்
பதட்டமில்லாப் பரிவிருக்கும்! பார்வையும்  அமைதியுறும்!
அதட்டலில்லா குரலிருக்கும்! அன்பே நிறைந்திருக்கும்!
வதனத்தில் சோர்விருக்கும்! வையக அறிவிருக்கும்! 

உருவத்தில் உயர்ந்திருப்பான்! உள்ளம் நிறைந்திருப்பான்!
கருவத்தில் சிறுத்திருப்பான்! காலம் பொறுத்திருப்பான்!
விருப்பத்தை விளம்பாதவன்! வீணாக விழிக்காதவன்!
சருப்பமே படைஎடுப்பினும் சடுதியில்  பதராதவன்!

" அரசே ! நாம்  மூவர்தான்
இந்த அறையின்
ஆக்கிரமிப்பாளர்களா ?"

" தெரியலைய்ங்க "

" சாப்பிட்டீங்களா "

" இல்லையிங்க "

உணர்வுகளை எல்லாம் உள்ளுக்குள் பூட்டி வைக்கும் உத்தி அறிந்தவன்.

உரியவர்களிடமும்  சினம் கொள்ளத் தெரியாத சினம் கொல்லத்தெரிந்தவன்.

எங்களின் நாலாவது உலகம் இவன்! அணுகுண்டு அருகில் வெடித்தாலும்  அசராதவன்!  

ஆருயிர் தோழன்! ஆனந்தப் படுவதிலும் அளவோடிருப்பவன்! நட்பில் பிசகாதவன்! 
                                                                                     
                                                                                        துளி விழும்.........

02 September 2010

துளி 3

 அறை எண். 24 வள்ளுவர் இல்லம் 

மரியக்குழந்தை இல்லம் 

இன்றை மட்டும் உணர்! நாளை என்பது நமக்கில்லை காண்!

ஆடிடோரியத்தில் எங்களுக்கெல்லாம்
வகுப்பறையின் கால அட்டவணையை தந்து
விடுதியின் விலாசம் தந்தனர்.

விடுதி என்று தான் எல்லா கல்லூரியிலும் இருக்கும்.
ஆனால் இங்கு மட்டும் தான் இல்லம் என்று இருந்தது. 

வள்ளுவர் இல்லம் -
மரியகுழந்தை இல்லம்
  - ஒன்று புல் வெளியில் புதையல் தேடுபவர்களுக்கு. 
  - மற்றொன்று பூக்களுக்கு.

வள்ளுவர் இல்லம் போகும்  வழியிடையில்  சிற்றுண்டி சாலை
கள்ளம் இல்லாத கவின் மலர் சோலைசூழ் நீச்சல் குளம் - உள்ளம்
கொள்ளை கொள்ளும் கொடிசுற்றிய வேலி பார்க்க பார்க்க
எல்லை இல்லாத ஆனந்தம் இறங்கிக் குளிக்க எண்ணம்.
உள்ளே பார்த்தால் ஒரு துளி நீரும் இல்லை.

காற்று என்ன காதல் பேசியதோ தெரியவில்லை மரங்கள் சில மறுதலித்தன!
ஊற்றெடுத்த உற்சாகத்தில் வந்து நின்றேன் வள்ளுவர் இல்லம் முன்

இல்லம் என்றால் இங்கு வந்தபின் தான் தெரிந்தது.
புனித இடங்களுக்கு கோயில் என்று பெயர் வைத்தால்
இதுவும் கோயில் தான்.

விடுதி என்று நினைத்தால் 
விடுதலை வேண்டி நிற்பவர்களுக்கு
இது விலங்கிட்ட  சிறை.
வானம்பாடிகளுக்கு இது வானம்.

இது அடைகாக்கும் பெட்டகம் முட்டைகளுக்கு.
வைரங்களுக்கு இது ஒரு மகுடம் .
அறியாமை சிதைகளுக்கு இது அணையா தீ 

குயில்களுக்கு இது கூடு கிளிகளுக்கு இது கூண்டு.
எலிகளுக்கு இது எப்போதும் வளை தான்.
புலிகளுக்கு இது வனாந்தர காடு .

இந்தியாவுக்கு அரண் வடக்கே - இமய மலை
இந்தக்கல்லூரிக்கு அரண் மேற்கே  - யானை மலை 
இனிவரும் அங்கங்களில் எல்லாம்  இந்த மலையும்
பனிவிழும் புல்வெளியும் பூக்களும் தான் உலவும் !

அறை எண் 24 :  

தொட்டதும் கூடம் திறந்தது வாயில் - சொர்க்கம்,
மற்றெதும் தராத மயிலிறகை இடுக்கி வைக்கும் புத்தகம்!  
சட்டென்று விழுந்தது  என் சட்டையின்  மேலே  ஒரு துளி !
விட்டத்தில் இருந்த சிட்டுக்குருவியின்  சில்மிஷம் சிறு துளி!

மூன்று கட்டில்கள் மூன்றில் ஒன்று முக்காலுடையது!
மூன்று அலமாரிகள் மூவர் இவ்வறையில் அடைக்கலம்!
செல்வம் இங்கு அரசேற்கும் முத்து இங்கு மகுடமேறும்!
கல்வி என்பது கற்றுணரத்தான் பல்வித்தை பயில வந்தோம்!

                                                                                  துளி எழும்  ......