14 March 2011

துளி 9


அழுதுண்டு வாழ்வோம் !

                           காப்பு !

       உயிரெலாம் உலகில் வாழ 
             உதவிடும் மங்கை நல்லாள் !
       பயிரெலாம் வளர்த்து நன்றாய் 
             பாரினில் பசுமை ஊட்டி 
       வயிரெலாம் நிறைத்து நாட்டில் 
             வருகிற வறுமை ஓட்டி 
       உயிரெலாம் காக்கும் தாயே !
             உதவிடென் கவிதை காக்க !


௧.   விதையினை கையில் ஏந்தி 
               விதைத்திடும் உழவன் நானென்
       கதையினை கேட்பாய் பாரே !
                கனவிலும் நினையார் யாரும் 
       சிதையினை வதைக்கும் தீயில் 
                குளிரினில்,காற்றில் , நோயில் 
       பதைத்தினும் உழைக்கும் வாழ்க்கை 
                பண்புளோர் இதனை கேட்க !


௨.  மடியிலே வாங்கி நித்தம் 
               மனையிலே உலையில் போடும் 
      நொடியிலே தீர்ந்து போகும் 
               நிலையிலா எந்தன் வாழ்வு 
      விடியுமா எமக்கு காலம் ?
               விடியுதே உலகில் நாளும் 
      வடித்திடும்  கண்ணீர் கண்டு 
                கடலதும் கடன்கள் கேட்கும் !


௩.  உழுதிடும் எங்கள் பின்னே 
               உலவிட வேண்டும் என்றும்
      தொழுதுநல் உலக மக்கள் 
               போற்றிட சொன்னார் யாரோ ?
      அழுதிடும் வாழ்க்கை வாழ்ந்து 
                அனைவரின் பின்னே சென்று 
      தொழுதிடும் வாழ்க்கை வாழ்ந்து 
                 சாகிறோம் துயரில் ஆழ்ந்து !


௪.  சந்தை கொணர்ந்த பொருளனைத்தும் 
                 குறைந்த விலைக்கு போவதைநாம் 
       விந்தை யோடு பார்த்திருப்போம்
                  விளைய வைக்க பட்ட இன்னல் 
       சந்தை மக்கள் ஏதறிவார் ?
                  சரிதம் முதலாய் நாங்கள்தாம் 
       கந்தல் ஆடை சொந்தமென்று 
                  கண்டு கொள்வோம் அந்தமட்டே !


௫.  கையில் வாங்கும் பணமெல்லாம் 
                   கணநே ரத்தில் பறந்திடுமே !
       பையில் போட இருக்காது 
                   பட்ட கடனை அடைத்திடவே !
       வெய்யில் முன்னே பனிபோலே 
                   வந்த பணமும் கரைந்திடுமே !
       மெய்யில் பட்ட வேதனைகள் 
                    வருடம் முழுதும் நிலைத்திடுமே !

௬.  மீண்டும் விதைக்க பணமில்லை !
                    மீண்டும் கடனே வேறில்லை!        
         யாண்டும் உலக உயிர்காக்க
                    எங்கள் குலமே பயிர் காத்து 
         வேண்டும் மட்டும் உணவிட்டு 
                    வாழும் வாழ்க்கை கண்டுஎங்கள்  
         தோண்டும் கிணறும் ஊறிவிடும் ! 
                    பட்ட துன்பம் ஆறிவிடும் !


[ கல்லூரியின் ஆண்டு புத்தகம் வென்றியத்தில் (TRIUMPH  1986 - 87)  என்  முதலாம் ஆண்டு தொடக்கத்தில் நான் எழுதி இடம் பெற்ற கவிதை ]