25 December 2010

துளி 8

 சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ( நட்பு ) 
ஏழாம் அறிவன் !

நட்பென்றால் 
இதயக்கதவுக்குள்
சிறை வைப்பாய் !

தப்பென்றால் 
இமயமானாலும்
சிதற வைப்பாய் !

உன்னை
உரசிப்பார்த்தால் 
எரிய வைப்பாய் !

உணவுக்குள் 
இருப்பாய் 
சிறிய உப்பாய் ! 

கண்டிப் பானவன் ! நட்பின்
               கலைஞன் ! தவறி ழைத்தால்
தண்டிப் பானிவன் ! எவர்க்கும்
               தனயன் ! யாவர் நலனும்
ஒன்றிப் போனவன் ! கருத்தில்
                ஓங்கார மானவன் ! சினத்தில்
குன்றிப் போகா திவனின்
                 குறிக்கோள் ஒன்றாம் நட்பு!

யாரையும் இயக்குவான் ! நட்பாலே
                 எவரையும் மயக்குவான் ! நண்பர்கள்
கூரையாய் திகழ்ந்திடுவான் வான்போலே
                 குழந்தையாய் மகிழ்ந்திடுவான் ! காற்றினிலே
சீரிலாமல் எழுதிடுவான் ! எப்போதும்
                  சிந்திப்பது போன்றிருப்பான் ! சுருள்முடியை
சீரிலாமல் வாரிடுவான் ! சிரித்திருப்பான் !
                  சிநேகிதத்தின் ஏழாவ தறிவிவனே !


சுயம் அழித்து ஞயம் வளர்ப்பான் !
ஞயம் வளர்ந்தால் சுயம் என்பான் !
லயம் அறிவான் இலாவகம் அறிவான் !
பயம் வெல்வான் பாடம் சொல்வான்  !


நான்கு கால் முயல்களை மட்டுமே பிடிப்பான் !
(என் செய முடியும் ஒன் செய முடியாது )
ஆண் குயில் மட்டுமே பாடுமென்பான் !

துளிகளை நட்பால் பிரபஞ்சம் ஆக்குவான் !
வளியினும் வார்த்தையில் வேகம் காட்டுவான் !

பிடிவாதத்தில் யாரையும்  மிஞ்சுவான் !
அடிக்குரல் பாடல்களை என்றும் இரசிப்பான் !
( அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ )

அச்சோகன் வெல்வான் !
அச்சோகம் கொல்வான் !  
(அ சோகன் = சோகம் இல்லாதான் )

என்று சந்தித்தேன் இன்று நினைவு அறிவிலில்லை !
என்றும் சந்திக்கிறேன் ! இன்று தூரம் அதிகமில்லை ! எம் நண்ப !
துளி கொட்டும் ........
                                                                                
                  

21 December 2010

துளி 7

ஜித்து கடை!


ஜித்து @ இந்த்ரஜித் 

அழுக்ககற்று ! அகத்தினின்றும் !

முதலாமாண்டு துளிர்கள் எல்லாம்
"ராகிங்" என்ற இனிய கொடுமைக்குள்
மனசில்லாமல் மடல் வெட்டப்படுவார்களாம்.
கல்லூரிக்குள் புகுமுன்பே கதை கேட்டதுண்டு!

சேர்த்து வைத்த நல்ல செயல்களெல்லாம் ............

சேற்றுக்குள் விழுந்து செந்தாமரையாய் முளைப்பதுண்டு
சேற்றுக்குள் விழுந்த சிறு விலங்கினமாயும் எழுவதுண்டு !

நாறாயினும் கன்றாயினும் மனமிருந்தால் மணமிருக்கும் !
வேறாயினும் உறவாயினும் அன்பிருந்தால் பண்பிருக்கும் !

வள்ளுவர் இல்லம் விட்டு வலம் நடந்தோம் !
உள்ளுவன உரைக்காமல் ஊமையாய் ஊர்ந்தோம் !
நீச்சல் குளம் தாண்டி பாய்ச்சலாய் வந்தோம் !
நீச்சன் ஒருவன் நிறுத்தினான் ! நின்றோம் !

அருகிருந்த கடை முன்பு அழைத்துச் சென்றான் !
புற ஆளுமை இங்கு தான் புதுப்பிக்க பெறுகிறது !
அழுக்கேறிய எங்கள் ஆடைகளின் அழுக்கழித்து
முறுக்கேற்றி கொடுப்பதின் முதலிடம் ஜித்து கடை !

"ஜித்து ! தீப்பெட்டி கொடு "

வழக்கமாய் வினவினான் ! வேண்டாதன விளம்பினான் !
வழி மொழிந்தோம் ! வழி நடந்தோம் !
இழிசெயலென அறிந்தும் இதம் கொன்றான் !
பழியுரைத்தான் ! பண்பிலன் ! "புகை" யுரைத்தான் !

இயன்றவரை இருமினேன் ! எச்சில்துளி எகிறித்தெரித்தது!
முயன்றுரைத்தேன் ! "புகை என் பகை " என்றேன் !
ஒவ்வாமல் ஓங்கரித்தேன் ! ஒன்றுமறியாது விழித்தான் !
ஒவ்வாமை கண்டு ஓடச்சொன்னான் ஓடினோம் !

                                                                                      துளி வரும் .......
  













05 October 2010

துளி 6

உணவறை !

இளவெயில் 
இதமாய் தொட 
வளவயல் 
வனிதையர் நட 
வரப்போரம் வரிசையாய் 
எறும்புகளாய் ஏறினோம்!


மத்திய பண்ணை 
இருபக்கமும் 
பரந்து விரிந்த 
பாதாம் மரங்கள் !
குடை பிடித்தாற்போல் 
எங்களை 
குசலம் விசாரிக்கும் !

கோழிப்பண்ணை 
கடந்தால் வெண் பன்றி கூடம் !
பால் பண்ணை 
பக்கத்தில் கால்நடை மாடம் !

எதிரில் தான் 
பருவம் வளர்ந்த  
பழத்தோட்டம் !

மீறி நடந்தால் 
பருவம் மீறிய 
பூந்தோட்டம் !
உட்புகும் 
உள நோட்டம்! 
மரியகுழந்தை இல்லம் !

வரிசையாய் வாகை 
மரங்கள் !

வந்தனம் கூறும் 
வந்தினம் !
வண்டினம் தேடும்  
பூவினம் ! 
இலைமறை 
காயினம் !

ஜன்னலின் பின்னால் 
பூக்களின்   புகலிடம் !
பூவையர் உறைவிடம் !

தும்பை பூவின் 
தூர் பாகம் 
துளிகளால் நிறைந்தது !
சுவைத்தால் இனிக்கும் !

வழியோரம் 
தும்பை செடிகள்  
விழியோரம் 
பசுமை வார்க்கும் !

யாரும் யூகித்தறியாத 
நேரத்தில் இங்கு 
மதிய உணவு வேளை!

நண்பகல் 
பதினோரு மணிக்கு 
இழுக்கும் 
பகல் உணவு ஆளை !

புதிராக இருந்தது !
புதிதாக இருந்தது !

வள்ளுவர் இல்லம் 
வந்தோம் !


" சார் மெஸ் எங்கே ?" 

"பர்ஸ்ட் இயரா"
" ஆமா சார் "

" வா சாப்பிட போவோம் "

                                                                                   துளிகள் விழும்........ 

18 September 2010

துளி 5

வகுப்பறை !
வாழ்க்கை நெறியை 
வரி கேளாமல் 
வாரி வாரி 
இயற்கை வழங்கும் !
இனியாவது இரசிப்போம்!

விடியாத காலையை 
விடியச் சொல்லி 
வேகமாக வந்தேன் 
வகுப்பறை தேடி!

இந்நேரம்  துளி
என் முகத்தில்!

வகுப்பு!
அறையில் இல்லை  
இயற்கை 
முறையில் இருந்தது!

வயல் வெளியில், 
வரப்போரம், 
வளர்ந்த மர நிழலில் 
பயிர்களின் உளவியல்
பற்றிய வகுப்பு!
உழவியல் வகுப்பு!
(ஆக்ரோநோமி கிளாஸ் )

வயல் வெளியில் 
வகுப்பறையா ?

வாய்க்கால் நீரின் 
சலசலப்பில் 
வாழ்க்கை பாடமா?

கிளிகளின் 
இனிய ஒலியில் 
இயற்கை கீதமா?

இவையெல்லாம் 
புதிதாகத்தான் இருந்தது! 
புதிராகத்தான் இருந்தது ! 
"மாட்டிகொண்டோமோ" 
மனது சலனப்பட்டது! 
சஞ்சலப்பட்டது!

புதியதோர் உலகம்
செய்வதற்காக
புழுதியில் புதையல்
தேடினோம்!

வரப்புகளில் வந்து
நடக்காத கமலங்கள்
வயலுக்குள் வழுக்கின!

ஓடி வந்து
உலகம் கலந்தேன்!

ஒரு விழி அசைத்து
ஓரவிழி பார்க்கும்
உழவியல் ஆசிரியர்
( யாரென்று நண்பர்கள்
அறிவார்கள் )
மிரட்ட
நினைத்து
விழி உருட்டும்
விகல்பர்!

மிரட்டிய தொனியில்
" ஒய்  லேட்?"
மிரளாது நின்றேன்!

பின்னால் சப்தம்
தன்னால் விழுந்தான்
நண்பன் செல்வன்!
பயமறியா கன்று
சுயமிழந்தது!

வகுப்பு முடிந்ததை
வணக்கத்தில்
முடித்தார்!
பிணக்கமின்றி
சுயமிழந்தவனை 
சுனை நீரில் துடைத்தோம் !

துளி வரும்........

07 September 2010

துளி 4

ஆனந்தத் திருமுகன்!

துயர் கண்டு அயராதிரு! உயர்வாய்! உண்மை !

பகையிலான்! பைந்தமிழ் பாட்டுடையான்! சொந்தம்
வகையிலான்! வானுயர் சோகத்தினும் உள்ளம்
நகையுடையான்! நாவின் சுவையுடையான்! நண்பர்
தொகையுடையான்! வான்மனம் குணம் கொண்டான்!

அன்பன்! அன்பிலார்க்கும் நண்பன்! நல்லவன்!
நண்பகல் வரைநன்றாய் துயில்வதில் வல்லவன்!
அன்பில் அகன்றவன்! ஆனந்தத் திருமுகன்!
செண்பகச் சுகந்தன்! சுடரறிவின் செல்வன்!

இந்த சுந்தரன் பேகனின் மயிலாய் சுருண்டு கிடந்தான்.
யாரென்று  தெரியாதவாறு முகம் மூடிக் கிடந்தான்.
நாடி வந்தோரை ஓடச் செய்யும் சூட்டில் காய்ந்தான்.
மூலைஒன்றில் முக்காடிட்டு மதிலில் சாய்ந்தான். 

 "சாப்பிட்டீங்களா "
 "ஹ்ம்"
"உடம்பு சரியில்லையா "
"ஹ்ஹ்ம்"

நண்பர்கள் தன்னைச் சுற்ற வைக்கும் இந்த பத்தாவது கோள்
இண்டம் தன்னை சுருக்குவதாய்  போர்வைக்குள் சுருங்கியது.
நண்டதன் வளைக்குள் நுழைந்தாலும் இவனொரு எட்டாவது
கண்டம்! கணுவில்லா கன்னல்! நட்புக் காண்டம்! நளினன்!

பொதிந்து வைத்த பொட்டலமாய் கிடந்தவனை
அதிர்ந்தேதும் கூறாமல் அரைநிலவாய் முகம்பார்த்தோம்!
முதிர்ந்தவன் போல் முனங்கித் தீர்த்தான் முகத்தினின்றும்
உதிர்ந்த துளிதுடைக்க உளைச்சல் ஓடிவிட்டது !

அரசாள்பவன்! 

உதட்டோரச் சிரிப்பிருக்கும்! உள்ளார்ந்த நட்பிலாளும்
பதட்டமில்லாப் பரிவிருக்கும்! பார்வையும்  அமைதியுறும்!
அதட்டலில்லா குரலிருக்கும்! அன்பே நிறைந்திருக்கும்!
வதனத்தில் சோர்விருக்கும்! வையக அறிவிருக்கும்! 

உருவத்தில் உயர்ந்திருப்பான்! உள்ளம் நிறைந்திருப்பான்!
கருவத்தில் சிறுத்திருப்பான்! காலம் பொறுத்திருப்பான்!
விருப்பத்தை விளம்பாதவன்! வீணாக விழிக்காதவன்!
சருப்பமே படைஎடுப்பினும் சடுதியில்  பதராதவன்!

" அரசே ! நாம்  மூவர்தான்
இந்த அறையின்
ஆக்கிரமிப்பாளர்களா ?"

" தெரியலைய்ங்க "

" சாப்பிட்டீங்களா "

" இல்லையிங்க "

உணர்வுகளை எல்லாம் உள்ளுக்குள் பூட்டி வைக்கும் உத்தி அறிந்தவன்.

உரியவர்களிடமும்  சினம் கொள்ளத் தெரியாத சினம் கொல்லத்தெரிந்தவன்.

எங்களின் நாலாவது உலகம் இவன்! அணுகுண்டு அருகில் வெடித்தாலும்  அசராதவன்!  

ஆருயிர் தோழன்! ஆனந்தப் படுவதிலும் அளவோடிருப்பவன்! நட்பில் பிசகாதவன்! 
                                                                                     
                                                                                        துளி விழும்.........

02 September 2010

துளி 3

 அறை எண். 24 வள்ளுவர் இல்லம் 

மரியக்குழந்தை இல்லம் 

இன்றை மட்டும் உணர்! நாளை என்பது நமக்கில்லை காண்!

ஆடிடோரியத்தில் எங்களுக்கெல்லாம்
வகுப்பறையின் கால அட்டவணையை தந்து
விடுதியின் விலாசம் தந்தனர்.

விடுதி என்று தான் எல்லா கல்லூரியிலும் இருக்கும்.
ஆனால் இங்கு மட்டும் தான் இல்லம் என்று இருந்தது. 

வள்ளுவர் இல்லம் -
மரியகுழந்தை இல்லம்
  - ஒன்று புல் வெளியில் புதையல் தேடுபவர்களுக்கு. 
  - மற்றொன்று பூக்களுக்கு.

வள்ளுவர் இல்லம் போகும்  வழியிடையில்  சிற்றுண்டி சாலை
கள்ளம் இல்லாத கவின் மலர் சோலைசூழ் நீச்சல் குளம் - உள்ளம்
கொள்ளை கொள்ளும் கொடிசுற்றிய வேலி பார்க்க பார்க்க
எல்லை இல்லாத ஆனந்தம் இறங்கிக் குளிக்க எண்ணம்.
உள்ளே பார்த்தால் ஒரு துளி நீரும் இல்லை.

காற்று என்ன காதல் பேசியதோ தெரியவில்லை மரங்கள் சில மறுதலித்தன!
ஊற்றெடுத்த உற்சாகத்தில் வந்து நின்றேன் வள்ளுவர் இல்லம் முன்

இல்லம் என்றால் இங்கு வந்தபின் தான் தெரிந்தது.
புனித இடங்களுக்கு கோயில் என்று பெயர் வைத்தால்
இதுவும் கோயில் தான்.

விடுதி என்று நினைத்தால் 
விடுதலை வேண்டி நிற்பவர்களுக்கு
இது விலங்கிட்ட  சிறை.
வானம்பாடிகளுக்கு இது வானம்.

இது அடைகாக்கும் பெட்டகம் முட்டைகளுக்கு.
வைரங்களுக்கு இது ஒரு மகுடம் .
அறியாமை சிதைகளுக்கு இது அணையா தீ 

குயில்களுக்கு இது கூடு கிளிகளுக்கு இது கூண்டு.
எலிகளுக்கு இது எப்போதும் வளை தான்.
புலிகளுக்கு இது வனாந்தர காடு .

இந்தியாவுக்கு அரண் வடக்கே - இமய மலை
இந்தக்கல்லூரிக்கு அரண் மேற்கே  - யானை மலை 
இனிவரும் அங்கங்களில் எல்லாம்  இந்த மலையும்
பனிவிழும் புல்வெளியும் பூக்களும் தான் உலவும் !

அறை எண் 24 :  

தொட்டதும் கூடம் திறந்தது வாயில் - சொர்க்கம்,
மற்றெதும் தராத மயிலிறகை இடுக்கி வைக்கும் புத்தகம்!  
சட்டென்று விழுந்தது  என் சட்டையின்  மேலே  ஒரு துளி !
விட்டத்தில் இருந்த சிட்டுக்குருவியின்  சில்மிஷம் சிறு துளி!

மூன்று கட்டில்கள் மூன்றில் ஒன்று முக்காலுடையது!
மூன்று அலமாரிகள் மூவர் இவ்வறையில் அடைக்கலம்!
செல்வம் இங்கு அரசேற்கும் முத்து இங்கு மகுடமேறும்!
கல்வி என்பது கற்றுணரத்தான் பல்வித்தை பயில வந்தோம்!

                                                                                  துளி எழும்  ......


27 August 2010

துளி 2

முதல் நாள்.
அங்கே.........

காலம் உன்னை கடந்தாலும் காற்று பையை பிரிந்தாலும் 
காலனிடமிருந்து மட்டும் கடன் கிடைக்காது என்பதுணர்க!  

செயற்கை தடாகம் தாண்டியவுடன் இங்குதான் செயல்வீரர்கள்
செயற்கரிய வரவேற்றனர்! பச்சை ஆடைஉடுத்தி பாங்காய்!
கல்லூரியின் படியேறி மகிழ்வும் கவலையும் மிரட்சியுடனும்
வில்லோடிவிட்ட வேலாய் விரைந்தோம் எழுச்சியுடன் !

செயற்கை நீரூற்று கீழிருந்து துளிகள் வீச இயற்கை நீரூற்று கண்களில்..
இந்த கல்லூரியில் மட்டும் எப்படி இத்தனை வண்ணங்களாய்  பசுமை!
இந்தப் பசுமை நினைவுகளல்ல! நினைவுகளாகப் போகும்  நிஜங்கள்!  
பெற்றோரை கிடைக்கப் பெற்றோர் பெருவாரியாய் கண்களில் துளிகளுடன்.

கண்ணின் மசி கரைந்து கன்னம் நனைத்த தோழியர் கூட்டம்.
எண்ணம் முழுதும் பெற்றோரை பிரிய போகும் துயர்.
நண்பர்களே! நீங்கள் யாரெல்லாம் அங்கே நின்றீர்கள் தெரியவில்லை!
கண்கள் எனக்கும்  திரையிட்டிருந்தது துளிகளால் புரியவில்லை!

ஆடி இட்ட ஓரிடம்! அது  கூடக் கூடும்  பேரிடம்!
நாடி வந்த சீரிடம்! நன்றிது போல்  உண்டோ பாரிடம்!
தேடி  வந்து கூடிடும்! தேன்பாகில் ஊறிடும்!
சூடி வந்த பூவிடம் சுந்தர தமிழ் பாடிடும்!

பாடல் அரங்கேறும் இடம்!
ஆடல்  அரங்கேறும் திடல்! 
திறமை மெருகேறும் இடம்!
சிறுமை வெளியேறும் திடல்!
திரைப்படம் இங்கு தூது போகும்!
நிறைகுடம் நித்தம்  ததும்பி ஓடும்!

ஆனந்தமா ! துக்கமா ! உணர்ச்சிப் பெருவாகத்தில் உள்ளம்!
ஏனிந்தத் துளிகள்! இமையணை தாண்டியும் வெள்ளம்!
நானிந்த உலகிற்குள் நுழைவேனென்று நினைக்கவில்லை!
வானிந்த பறவைகளின் சிறகுகளை நனைக்கவில்லை!

மண்வெட்டி பிடிக்க மலர்க்கைகள் அதிகமாய் வந்திருந்தன !
இந்த கல்லூரியில் தான் வண்டுகளை விடவும் மலர்கள் அதிகம் !
காகங்களை விடவும் கிளிகள் அதிகம்! நீரை விடவும் வயல்கள் அதிகம்!
மீசை முளைத்தவர்களை விடவும் ஆசைபட வைப்பவர்கள் அதிகம்

குயில்களை விடவும் இனிமை அதிகம்! அழுகை விடவும் ஆறுதல் அதிகம்!
மந்திகள் அதிகம்! மானினம் அதிகம்! மயங்கச் செய்யும் மதுவினம் அதிகம்!
சிந்தும் துளியை முந்தியால் துடைத்து அம்மா சொன்னார்கள் "அழாதே!"
கன்னம் நனைத்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை! 

                                                                                      துளிகள் வடியும்.......... 





24 August 2010

துளி !





துளி ! 
நிகழ்காலத்தின் கடைசி துளி அமுதம் வரை வழிந்தோடும் வாழ்க்கையை அருந்திவிடுங்கள் ! என் நண்பர்களே !

அது ஒரு மழைக்காலம் ! அந்தி மயங்கிய காலம் ! கதிர் முயங்கிய நேரம்
நாற்றங்கால் விட்டு  நடுவயல் தேடும் நாற்றின் பருவம்......

தோரண வாயில்கள் தொடர்ந்து அணி வகுத்தது போல் ஆங்காங்கே 
ஆல மரங்களும் அரச மரங்களும் நாவல் மரங்களும் நன்னீர் தெளித்தன.
நீர்த்துளிகள் இலைகளின் இடுக்குகளிடையே வழிந்தோடி உடல் நனைத்தன.

தலையின் மீது விழும் துளி உடலையும் மனதையும் குளிரூட்டியது.
 மலையின் முகடு வழியே வரும் காற்று மனதுக்குள் சிலிர்ப்பேற்றியது.

புதிதாய் பூத்த பூவை போல் அழகனைத்தையும் அடக்கி வைத்து 
நாணப்பட்டன! நர்த்தனமிட்டன! அத்தனை இலைகளும் ஆர்ப்பரித்தன.

பறவைகள் பாடி அழைத்தன.குயில்கள் கூவி அழைத்தன.
எங்கு நோக்கினும் மயில்கள் வயல்வெளிகளில் தங்கு தடையின்றி ஆடின.
தேனீக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் தேனுறிஞ்சிய வேகத்தில் 
மலர்கள் வழிநெடுகிலும் மயங்கிக்கிடந்தன !

வானம் துளி தூவி, துயிலுணர்ந்த முகிலை துகிலுரித்தது !
தூறல் நின்றாலும் துளிகள் நிற்கவில்லை 

சொட்டுச்சொட்டாய் ....... சொட்டுச்சொட்டாய்......  

நவம்பர் 5 , 1986 

நீயும் நானும் நம் கல்லூரி வாசலில் அடியெடுத்து வைக்கும்போது 
யாயும் ஞாயும் யார் யார் போலோ தானே  வந்தோம்!

கல்லூர் தெரியாது கல்லூரி தெரியாது 
செல்லூர் தெரியாது செல்லாத ஊரும் தெரியாது 
நல்லது தெரியாது அல்லதும் தெரியாது 
எவ்வூரும் தெரியாது எவரும் தெரியாது 
ஒவ்வொருவரும் நடந்து வந்தோம் !

" நீங்க எந்த வூரு ? "    
" தூத்துக்குடி..... நீங்க ? "
" திருவண்ணாமலை .... தம்பி ! பெயர்  என்னப்பா  ? "
" முத்து.... " 
" உங்க பையன் பெயரென்ன ? "
" அரசு... "

நீயும் நானும் பேசிக்கொள்ளவில்லை ! பெயர் மட்டும் தான் சொன்னோம் !
நம் தந்தையர் பேசிகொண்டதை நான் கவனிக்கவில்லை 
நீ கவனித்தாயா தெரியவில்லை .

கூப்பிடும் தூரத்திலிருந்து மீண்டும் கூப்பிடு  தூர தூரத்தில் கை 
கூப்பி நின்றனர் நம் மூத்த சகோதர மாணவர்கள் 

ஒரு செயற்கை நீர்த்தடாகம். 
தடாக நடுவில் மூன்று கொக்குகள் 
நான்காவது பறக்க எத்தனிக்கும் கொக்கு. 
கொக்குகளின் பின்னே செயற்கை நீரூற்று  அங்கே.........
                                                                                            
                                                                                    - துளிகள் வழியும்..........








23 August 2010

உருவானேன் ! உயர்வானேன்!

நண்பா !

உருவானேன் !  உயர்வானேன்!
உருவாவேன் ! உயர்வாவேன் !
கருவாவேன் !  உலகிற்கு
எருவாவேன் ! வெற்றித் 
திருவாவேன் ! இனி
வருவாய் ! திருமொழி தருவாய் !
உன்னாலே எந்நாளும் என்னேற்றம்
எல்லோரும் காண்போமே முன்னேற்றம்
( நன்றி ! என் இனிய நண்பர்களே ! ) 


* தூத்துக்குடி முத்து *